திருப்பூர்

திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 400-க்கும் மேற்பட்டோர் குடியிருப்பு பகுதியில் இருக்கும் சாராயக் கடையை அகற்ற கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைப்பெற்றது.

இதில், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில், தெற்கு அவினாசிபாளையம் கொடுவாய், வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 100–க்கும் மேற்பட்டவர்கள், தங்கள் பகுதியில் சாராயக் கடை அமைக்கக்கூடாது என்று கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், “எங்கள் பகுதியில் 850–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் புதிதாக சாராயக் கடை கட்டி திறக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடைக்கு அருகே குடிநீர் தொட்டி உள்ளது. அங்கு குடிநீர் பிடிப்பதற்கு செல்ல பெண்கள் அச்சமடைந்து உள்ளனர். குடிகாரர்கள் சாராய பாட்டில்களை சாலையோரம் உடைத்துப் போட்டு செல்கின்றனர். அந்த வழியாக நடமாட சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, குடியிருப்பு பகுதிக்கு நடுவில் அமைந்துள்ள இந்த சாராயக் கடையை அகற்ற வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.

அதேபோன்று கொடுவாய் தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்த 300–க்கும் மேற்பட்டவர்கள் வெற்றுக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.

அவர்கள் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் சாராயக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த கடை வந்தால் எங்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டாம்.

மேலும், எங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. எங்கள் பகுதியில் உள்ள சிலர் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்கிறார்கள். இதனால் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது. இதனால் எங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக கடுமையான சிரமத்தைச் சந்தித்து வருகிறோம். தண்ணீரை விலைக்கு வாங்கி வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, எங்கள் பகுதியில் தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.