கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் பிளிச்சி ஊராட்சி அருகே பெட்டதாபுரம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

இந்தப் பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நான்கு போர்வெல் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது நான்கு போர்வெல்களிலும் தண்ணீர் இல்லாததால் அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் இங்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இங்கு வினியோகிக்கப்படும் குடிநீர் இந்த பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. இந்த நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் குடிநீர் கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். 

கடந்த ஆறு மாதங்களில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வெற்றுக் குடங்களுடன் நேற்று காலை 10.30 மணியளவில் மத்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் மணி தலைமையில் காவலாளர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "எங்கள் கிராமத்திற்கு தேவையான அளவு குடிநீர் வழங்க அரசு அதிகாரிகள் உறுதியளிக்க வேண்டும்" என்றனர். 

இதனைத் தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா அங்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

இந்த சம்பவத்தின் காரணமாக கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.