Asianet News TamilAsianet News Tamil

தேர்தலை முறையாக நடத்த வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்...

More than 100 women are held in road block protest and emphasis election in proper way
More than 100 women are held in road block protest and emphasis election in proper way
Author
First Published Mar 27, 2018, 6:27 AM IST


திருவண்ணாமலை

திருவண்ணாமலையில், கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்த வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 2, 7, 16, 23 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. 

அதனைத் தொடர்ந்து நேற்று தேர்தலுக்கான வேட்பு மனுவை ஏராளமானோர் அந்தந்த வாக்குச்சாவடி மைய தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தாக்கல் செய்தனர்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை, திருவள்ளுவர் நகரில் உள்ள தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவுச் சங்கத்திலும், வேட்பு மனு தாக்கல் மைய தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரகுமார் முன்னிலையில் நடைப்பெற்றது.

இந்தச் சங்கத்தில் 1390 உறுப்பினர்கள் (பெண்கள் மட்டும்) உள்ளனர். இந்தச் சங்கத்தில் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த செல்வி என்பவர் இருந்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின் போது சங்க உறுப்பினர் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். அவர்களிடம் மைய தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பு மனுக்களை வாங்கிக் கொண்டு ஒப்புகை சீட்டு வழங்கவில்லை.

இதனால் சங்கத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பியவாறு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்ததும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இதனையடுத்து மைய தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கினார். அதனைத் தொடர்ந்து அந்த மையத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால் வேட்பு மனுதாக்கல் முடியும்வரை தொடர்ந்து காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios