More than 100 fighters working at the new thermal plant

திருவள்ளூர்

புதிதாக அமைக்கப்படவிருக்கும் அனல்மின் நிலையத்தில் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் அனல்மின் நிலைய கட்டுமான பகுதியில் உள்ள அலுவகத்தின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த வாயலூர் மற்றும் நெய்தவாயல் ஊராட்சிகள் அடங்கியப் பகுதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டது.

இதில் இரண்டு அலகுகளில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்காக புதிதாக அனல் மின் நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருகிறது.

வாயலூர் ஊராட்சியில் அடங்கிய ஏழு கிராம மக்கள் “தங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்” என்று பல்வேறுப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. அரவிந்தன் தலைமையில் நேற்று முன்தினம் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.

வேலை வாய்ப்புகள் உள்பட ஏழு அம்ச கோரிக்கைகளை கிராம மக்கள் வலியுறுத்தினர். கிராமக் குழு அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது, 350 பேருக்கு வேலை வழங்க தனியார் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை முடிவுத் தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நெய்தவாயல் ஊராட்சியைச் சேர்ந்த தமிழ்கொரஞ்சூர் கிராமத்தைச் சார்ந்த 100–க்கும் மேற்பட்டோர் அனல்மின் நிலைய கட்டுமான பகுதியில் உள்ள அலுவகத்தின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த மீஞ்சூர் ஆய்வாளர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் தமிழ்கொரஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த வீரன், காசி, ஆகியோரிடம் அனல்மின் நிலைய ஒப்பந்த நிறுவன அதிகாரி பிரேம்குமார், மீஞ்சூர் ஆய்வாளர் வெங்கடேசன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கிராம குழுவில் உங்கள் கிராமத்தின் பெயரையும் இணைத்துக் கொண்டு வேலை வாய்ப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.