Asianet News TamilAsianet News Tamil

மரவள்ளிக் கிழங்கில் கலப்படம் செய்வதை தடுக்க அரசுக்கு கோரிக்கை - நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...

more than 100 farmers Requesting the Government to Prevent mixing cassava and demonstrated ...
more than 100 farmers Requesting the Government to Prevent mixing cassava and demonstrated ...
Author
First Published Feb 10, 2018, 12:02 PM IST


சேலம்

மரவள்ளிக் கிழங்கு பொருள்களில் நடைபெறும் கலப்படத்தை அரசு உடனடியாக தடுக்க வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை வைத்துள்ளனர்.

சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மரவள்ளி விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மானாவாரி பயிராக மரவள்ளி ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்படுகிறது. கடந்தாண்டுகளில் டன் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் விலை போன மரவள்ளி தற்போது ரூ.6500-க்கும் மட்டுமே விலை போகிறது.

கிழங்கு அரவை ஆலைகள் கலப்படத்தில் ஈடுபடுவதால், போதிய விலை கிடைப்பதில்லை. மரவள்ளி உற்பத்திச் செலவைவிட, மிகக் குறைந்த விலைக்கு சந்தையில் விற்பனையாவதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நட்டத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகளில் இருந்து அதிகப்படியாக இறக்குமதி செய்யப்படும் ஸ்டார்ச் மாவை மரவள்ளிக் கிழங்கு பொருள்களோடு கலப்படம் செய்வதால், விவசாயிகள் விளைவித்த மரவள்ளிக் கிழங்கினை சந்தைப்படுத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

குறைந்த முதலீட்டில், அதிக இலாபம் கிடைப்பதால் ஆலை உரிமையாளர்களும், வியாபாரிகளும் மக்காச்சோள மாவினை கலப்படம் செய்து, சந்தைக்கு விற்பனை செய்வதால், மரவள்ளிக் கிழங்கு தரம் குறைந்து, அதை உணவுப் பொருளாகப் பயன்படுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

மரவள்ளிக் கிழங்கில் கலப்படம் செய்வதால், முன்பு விற்பனையாகி வந்த 75 கிலோ எடை கொண்ட மரவள்ளிக் கிழங்கு மூட்டை ரூ.900 இல் இருந்து ரூ.300 ஆக விலை குறைந்து விற்பனையாகிறது.

ஆயிரக்கணக்கான மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு, மரவள்ளிக் கிழங்கு பொருள்களில் நடைபெறும் கலப்படத்தை அரசு உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராம கவுண்டர், பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி ராஜேந்திரன், மரவள்ளி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன், மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், கோவிந்தராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios