கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் உள்ள ஏ.டி.எம்.களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்  வாடிக்கையாளர்கள் கடுமையாக அவதியடைந்து உள்ளனர். இந்த நிலையை உடனே சீர்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

உத்தரபிரதேசம், குஜராத் உள்பட வடமாநிலங்களில் சந்தைகளில் பணப்புழக்கம் குறைந்து வருவதால் இந்த மாநிலங்களில் உள்ள பெரும்பாலான நகரங்களில் இருக்கும் ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை. இதனால், எந்த நேரமும் காலியாகவே கிடக்கின்றன. சில ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பினாலும் 15 நிமிடங்களில் காலியாகி விடுகிறது.

இதேபோன்று தமிழகத்திலும் திடிரென ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் செயல்படாமலேயே இருக்கின்றன. சில ஏ.டி.எம். மையங்கள் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் மாநகர பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம் இல்லை. சில ஏ.டி.எம்.களில் மட்டுமே பணம் கிடைத்தது. இதனால் அங்கு வாடிக்கையாளர்கள் நெடும் வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்துச் சென்றனர். அவற்றில் விரைவில் பணம் தீர்ந்து போனதால் பணம் எடுக்க காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து மக்கள், "கோயம்புத்தூர் மாநகர பகுதியில் பல இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. ஆனால், அங்கு சென்று பார்த்தால் பெரும்பாலான எந்திரங்களில் "ஔட் ஆஃப் சர்வீஸ்" என்ற அறிவிப்பு பலகையே காணப்படுகிறது. 

ஏ.டி.எம்.களில் பணம் வராததால், வங்கி கணக்கில் பணம் இருந்தும் அதை எடுத்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பெரிய கடைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பொருட்கள் வாங்கினால் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தலாம்.

ஆனால், சிறிய அளவிலான மளிகை கடை, டீக்கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் பணம்தான் தேவை. அங்கு கார்டை பயன்படுத்த முடியாது..

ஏற்கனவே கடந்த 2016-ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக கடும் சிரமத்தை சந்தித்தோம். தற்போது பணப்புழக்கம் இல்லாததால் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம்.களை தேடி அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அதை சரிசெய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வேதனையாக இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க சில மர்ம ஆசாமிகள் ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தியிருப்பதால் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று பணம் எடுக்கவும், வெளியிடங்களில் ஏ.டி.எம். கார்டுகளை சுவைப் செய்து பொருட்கள் வாங்கவும் பயமாக இருக்கிறது. 

எனவே, இதுபோன்ற செயல்கள் ஏற்படாமல் தடுக்கவும், ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்" என்று அவர்கள் கூறினார்கள்.