moi virundhu for tn farmers

தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள், மொய்விருந்து நடத்தி நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக வெஸ்ட் விண்ட்சர் பகுதியில் வரும் ஞாயிற்றுக் கிழமை மொய் விருந்து நடத்துகின்றனர்.

ஒருவர் பொருளாதார ரீதியில் நலிவடைந்துவிட்டால், அவர் தனது வாழ்வாதாரத்துக்கு மொய் விருந்து நடத்தி அதன் மூலம் கிடைக்கும் நிதியை வைத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வார். இந்த பண்பாட்டு முறை தற்போது தமிழகத்தில் அழிந்து கொண்டிருந்தாலும், தமிழகத்தின் ஒரு சில கிராமங்களில் மொய் விருந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

இதே போன்று தமிழகத்தில் தண்ணீரின்றி தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உதவ மொய் விருந்து நடத்தி நிதி சேர்க்க அமெரிக்க வாழ் தமிழர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்காவின் நியூஜெர்சி பகுதியில் வசிக்கும் தமிழர்கள் விடுத்துள்ள அறிக்கையில், " தமிழ் நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்தால் குறு நில விவசாயி இயற்கையுடனும், படைத்த ஆண்டவனிடமும், ஆளும் அரசாங்கத்திடமும், மன்றாடி போராடி மாய்ந்து கொண்டிருக்கிறான்.

வறட்சியினால் விவசாயக் குடும்பங்கள் பஞ்சத்தில் வாடுகின்றன. நீர் வளத்தில் செழித்த வேளாண்மை நிலங்கள் அனைத்தும் நீரில்லாமையாலும், அயல் நாட்டு விதைகளின் இறக்குமதியாலும், போதுமான உரங்களும், சத்துகளும் இல்லாததாலும், தரிசு நிலமாக மாற, விவசாயிகளின் தற்கொலைகளும், மாரடைப்பு, ரத்த அழுத்த இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

ஆளும் அரசாங்கமோ குறுநில விவசாயிகள் வேளாண்மைக்கு வாங்கிய வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. தனியாரிடம் வாங்கிய கடன் தொல்லைகளால் விவசாயக் குடும்பங்கள் நலிந்து போகின்றன. நமக்கு அன்னமிட்டு வளர்த்த பூமியில் நம் விவசாயிகள், அழிவதை கண்டும் காணாதது போல, நாம் மட்டும் வயிறு முட்ட உண்டு, மகிழ்ந்து, நிம்மதியாக உறங்க முடியுமா ? என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் இந்த இக்கட்டான நிலையில் நம்மால் முடிந்த சிறு உதவிகளை நம் தாய் மண்ணுக்கு செய்வது நம் அனைவரின் தலையாயக் கடமை அல்லவா? என தெரிவித்துள்ள அமெரிக்க வாழ் தமிழர்கள்
நம் தமிழ் மண்ணில் விவசாயத்தை மீட்போம் என உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

இந்த மொய் விருந்துக்காக , நியூஜெர்சி வட்டார தமிழர்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதன்படி கிராமியத் திருவிழா மொய்விருந்து மே 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வெஸ்ட் விண்ட்சர் அருகில் 31 Allens Road ல் காலை 11 மணி முதல் நடைபெற உள்ளது மொய் விருந்து நன்கொடை செலுத்தும் முறை உள்ளிட்ட தகவல்களை www.moivirunthu.org என்ற இணைய தள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.