Mobile hotel run by transgender

திருநங்கைகளால் நடத்தப்படும் நடமாடும் உணவு டிரக், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடமாடும் உணவு டிரக்குக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கோவை தனியார் கல்லூரியை சேர்ந்த "யுகம்" என்னும் மாணவர்கள் குழு, திருநங்கைகளால் நடத்தப்படும் 'நடமாடும் உணவு டிரக்' ஒன்றை அறிமுகப்படுத்தியது.

கோவை, குமருகுரு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் குழு, நடமாடும் உணவு டிரக் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. யுகம் என்னும் மாணவர்கள் குழு, திருநங்கைகளால் நடத்தப்படும் நடமாடும் உணவு டிரக்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

நடமாடும் உணவு டிரக்-ஐ குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட இந்தநிகழ்ச்சியில், கல்லூரி நிர்வாக சார்பில் திரு.சங்கர் வனவராயர் மற்றும் ரோட்டரி கோயம்பத்தூர் மத்திய தலைவர் என்.தாமோதரன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

நடமாடும் உணவு டிரக், 3 திருநங்கைகளால் இயக்கப்படுகிறது. இந்த 3 பேர் கொண்ட குழுவில் 15 வருட சமையல் அனுபவமுள்ளவரும், சமூக ஆர்வலருமான தஸ்நீம், இந்திய உணவு வகைகளில் பெயர் பெற்றவரான சுசித்ரா, நொறுக்கு தீனிகள் தயாரிப்பாளரான யாமினி ஆகியோர் உள்ளனர்.

கோவையில் உள்ள பல கல்லூரிகளுக்கு, யுகம் மாணவர் குழுவுடன் இணைந்து சென்று மாணவர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தை கல்லூரி மாணவ - மாணவிகள் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

தனியார் அலுவலகங்கள் உள்பட பல்வேறு துறைகளில் திருநங்கைகள் சாதித்து வரும் நிலையில், ஓட்டல் துறையியிலும் அவர்கள் கால்பதித்து அசத்தி வருகின்றனர்.