Asianet News TamilAsianet News Tamil

500, 1000 நோட்டுகளுக்கு தடை – மத்திய அரசை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்

mkstalin strike
Author
First Published Nov 28, 2016, 9:16 AM IST


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து, எதிர்கட்சிகள் இன்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. தமிழகத்தில் திமுக, இடதுசாரி கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்துக்கு வணிகர்ள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பால், கடந்த 20 நாட்களாக பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

மீனவர்கள், நெசவாளர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் தொழில்களுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர். இதனால், சிறு வணிகர்கள் வியாபாரம் நடைபெறாமல் கடைகளை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடந்த 24ம் தேதி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், வாக்கெடுப்புடன் கூடிய ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்து அதனை அவையிலே விவாதிக்க வேண்டும் எனவும், கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அதேபோல் நாடாளுமன்றத்தின் வெளியே தொடர்ந்து போராட்டங்களை நடத்தி மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முதலாவதாக, நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 24ம் தேதி தர்ணா போராட்டம் நடத்தினர்.

அதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 200 எம்பிக்கள் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த வேளையில், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை எந்த நிலையிலும் வாபஸ் பெறமுடியாது என்றார்.

மத்திய அரசின் இந்தக் கடுமையான நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்த போராட்டத்தில் திமுக பங்கேற்கிறது.

அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், மத்திய அரசு அலுவலகங்களின் முன்பு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். அதன்படி, ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட திமுக சார்பில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு இன்று காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். இதேபோல், அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அனைத்துப் பிரிவு மக்களின் ஒத்துழைப்புடன், அனைத்து தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத முடிவுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டுமென்று திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரும் பங்கேறகின்றனர்.

தமிழகத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ்யூசிஐ ஆகிய இடதுசாரி கட்சிகளும், மத்திய பாஜ அரசை எதிர்த்து இன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கடிள முன்பு முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என அறிவித்துள்ளன.

போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் போராட்டத்தில் திருமாவளவன் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும், அடுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.

ஆனாலும், மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து, இடதுசாரிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் வணிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தில் இன்று நடைபெறும் போராட்டம் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளதால் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் வலுக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios