அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த முறை வந்தபோது, தேர்தல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் மே 10ஆம் தேதி (இன்று) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
அதன்படி, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர் நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. . ஜூன் 2ஆம் தேதி அவர் சரணடையுமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குப்பதிவு விவரங்களை 48 மணி நேரத்துக்குள் வெளியிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!
“கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்குப்பதிவு செய்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், தேர்தலுக்கு வெகு சமீபத்தில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலுக்கு முன்னதாகவே அல்லது பின்னரோ அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம்.” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையின்போது, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியபோது, அவருக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளைப் போலவே, கெஜ்ரிவாலுக்கும் ஜாமீன் நிபந்தனைகள் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதேபோல், கெஜ்ரிவால் முதல்வராக எந்த அதிகாரபூர்வ பணிகளையும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ளனர். டெல்லி இடைக்கால காங்கிரஸ் தலைவர், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி என நாடு முழுவதும் ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை நீதியை நிலைநாட்டுவது மட்டுமின்றி நமது இந்திய கூட்டணியை பலப்படுத்துவதுடன், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நமது வேகத்தை வலுப்படுத்துகிறது.” என பதிவிட்டுள்ளார்.