மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்: கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின்!
மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கோவை சென்றடைந்துள்ளார்
முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு மண்டல வாரியாக ஐந்து இடங்களில் ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான கடமைகள், பணிகள், சவால்களை சந்திப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் வாக்கு சீட்டை சரி பார்க்கும் முறை, வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் முறை, சமூக வலைதளங்களை கையாளும் முறை போன்றவை குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருச்சியில் டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டமும், இரண்டாம் கட்டமாக தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்திலும் நடைபெற்று முடிந்துள்ளது.
அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு விசா மறுப்பு: சீனாவுக்கு அனுராக் தாக்கூர் கண்டனம்!
அதன் தொடர்ச்சியாக, திருப்பூர் காங்கயம் அருகே படியூர் சிவகிரியில் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மாநாட்டு பந்தலில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் கொடியேற்று விழா இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திமுகவின் 14 மாவட்டத்தை சேர்ந்த 15 ஆயிரம் முகவர்கள், 5 ஆயிரம் திமுக நிர்வாகிகள் என 20 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய தோற்றத்தில் முகப்பு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் திமுகவினர் பசியாற சைவ, அசைவ என உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிவகிரியில் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை சிறப்புரையாற்றவுள்ளார். இதற்காக, விமானம் மூலம் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கோவை சென்றுள்ளார். அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, பின்னர் சாலை மார்க்கமாக அவர் காங்கேயம் செல்லவுள்ளார்.
முன்னதாக, விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் விளாங்குறிச்சி பகுதியில் திடீரென சாலை பணிகளை ஆய்வு செய்தார். அப்பகுதியில் சாலை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.