முதன்முறையாக ராமநாதபுரம் விசிட்: மீனவர்களை நாளை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!
ராமநாதபுரத்தில் மீனவ மக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்கவுள்ளார்
முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரத்தில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று மாலை மதுரை வந்த அவர், சாலை மார்க்கமாக இன்று பிற்பகலில் ராமநாதபுரத்தை அடைந்துள்ளார். அங்குள்ள அரசு விடுதியில் ஓய்வெடுத்த முதல்வர் ஸ்டாலின், பேராவூரில் நடைபெற்று வரும், திமுக தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக ராமநாதபுரம் வந்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். திமுக பயிற்சி பாசறை கூட்டம் முடிவடைந்த பிறகு, ராமேஸ்வரத்துக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கவுள்ளார்.
தொடர்ந்து, நாளை காலை மண்டபம் முகாம் அருகில் உள்ள விமான தளத்தில் நடைபெறவுள்ள மீனவர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார். இதில், 178 மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அப்போது அரசு சார்பில் மீனவர்களுக்கு உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன், இலவச பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவார் என தெரிகிறது.
மட்டன் பிரியாணி, சிக்கன் 65: திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு விருந்து!
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படுவதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களும் தொடர் கதையாக உள்ளன. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பலரும் வலியுறித்தி வரும் நிலையில், ஸ்டாலின் உடனான கூட்டத்தின் போது, மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அத்துமீறல்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. தாங்கள் சந்திக்கும் இன்னல்களை மீனவர்கள் முதல்வரிடம் விரிவாக எடுத்துக் கூறுவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுதவிர, மூக்கையூற் மீன்பிடி துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தை மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, தங்கச்சிமடத்தில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் மீனவர்கள் முன்வைத்துள்ளனர். அதுகுறித்தும் பேசப்படும் என தெரிகிறது.