திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பசியாற சுடச்சுட பிரியாணி விருந்து வழங்கப்பட்டது

திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக, திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு மண்டல வாரியாக ஐந்து இடங்களில் ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக டெல்டா, மத்திய மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சியில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில், 15 மாவட்ட கழகங்களை சேர்ந்த 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது. பேராவூரில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி வடக்கு, தேனி மேற்கு, மதுரை மாநகர், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமர் கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய 19 மாவட்ட கழகங்களை சேர்ந்த 16,978 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பசியாற சுடச்சுட பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. பயிற்சி பாசறை கூட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அவர்களுடன் வந்தவர்கள் என சுமார் 20 ஆயிரம் பேருக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி, சிக்கன் 65 வழங்கப்பட்டது. திருச்சி பாசறைக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கே.என்.நேரு கவனித்த நிலையில், ராமநாதபுரம் கூட்டத்தை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஏற்பாடு செய்துள்ளார். 

இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான கடமைகள், பணிகள், சவால்களை சந்திப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் வாக்கு சீட்டை சரி பார்க்கும் முறை, வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் முறை, சமூக வலைதளங்களை கையாளும் முறை போன்றவை குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அமைச்சர்கள் பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.என்.நேரு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

தனித்து விடப்பட்ட பாஜக... நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சி இந்துக்களாலேயே தூக்கி எறியப்படும்.!- திருமாவளவன்

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மாலை 4 மணிக்கு கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆலோசனைகள் வழங்க உள்ளார். முதல்வர் ஸ்டாலின் பேசும் மேடை கோட்டை கொத்தளம் போன்ற முகப்புடன் அமைக்கப்பட்டு இருக்கிறது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை மதுரை வந்த அவர், இன்று சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் சென்றுள்ளார். முதல்வராக பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக ஸ்டாலின் ராமநாதபுரம் சென்றுள்ளார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி பாசறைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, ராமேஸ்வரத்தில் இன்று தங்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை மீனவர்கள் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசவுள்ளார். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி ராமநாதபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.