சாதனைத் தம்பி பிரக்ஞானந்தாவை செல்போனில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவை செல்போனில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்

MK Stalin telephoned Praggnanandhaa and wish him runner up on fide Chess World Cup

உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா களம் கண்டார். இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்ததால், வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்கன டை பிரேக்கர் ஆட்டத்தில் இன்று மேக்னஸ் கார்ல்சனும், பிரக்ஞானந்தாவும் இன்று மோதினர். ரேபிட் முறையில் இரண்டு ஆட்டம் நடைபெற்றது.

அதில், உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் வென்றார். அவருக்கு மிகப்பெரும் சவால் கொடுத்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார். உலக ஜாம்பவான்களுடன் மோதி இறுதிப் போட்டி வரை களம் கண்டு போராடி தோல்வியடைந்த பிரக்ஞானந்தாவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரக்ஞானந்தா மற்றும் அவரது தாயார் நாகலட்சுமி ஆகியோரை செல்போனில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். பிரக்ஞானந்தாவிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “உங்கள் ஆட்டத்தை காண ஆவலுடன் இருந்தேன். இரண்டு ஆட்டங்களை டிரா செய்தீர்கள். நன்றாக விளையாடினீர்கள். என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுகள்.” என்றார்.

 

 

இரண்டம் இடம் பிடித்த வருத்தத்தை தெரிவித்த பிரக்ஞானந்தாவிடம், அதெல்லாம் ஒன்றுமில்லை; நன்றாக விளையாடினீர்கள்; இவ்வளவு தூரம் வந்தது பெரிய சாதனை; அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்; நீங்கள் சாதனை படைத்துள்ளீர்கள் என ஆறுதலாக பேசினார் முதல்வர் ஸ்டாலின். அவரது தாயார் நாகலட்சுமி, உங்கள் அனைவரின் ஒத்துழைப்புதான் இவ்வளவு தூரம் வர முடிந்தது என்று முதல்வர் ஸ்டாலினிடன் நெகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு வரும்போது பிரக்ஞானந்தாவை வரவேற்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவார் எனவும், தன்னை வந்து பார்க்கும்படியும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: திருக்குவளை பள்ளியில் நாளை தொடங்கி வைக்கும் ஸ்டாலின்!

முன்னதாக, செஸ் உலகக் கோப்பையில் இரண்டாம் இடம் பிடித்த  பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், “உலகின் நம்பர் 2 ஆட்டக்காரரான நகமுரா, நம்பர் 3 ஆட்டக்காரரான கேருவனா ஆகியோரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த உமது பயணம் எங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இறுதி முடிவு என்னவாக இருந்தாலும், உங்களது சாதனையோடு 140 கோடி இந்தியர்களின் இதயங்களும் இணைந்து துடிக்கிறது. நம் நாடே உங்களை நினைத்துப் பெருமை கொள்கிறது பிரக்ஞானந்தா” என்று தெரிவித்திருந்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios