முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தினை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்
முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது.
அதன்படி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தினை முதல்வர் ஸ்டாலின் வருகிற 25ஆம் தேதி (நாளை) நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை 07.45 மணியளவில் தொடங்கி வைக்கவுள்ளார்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணை கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் கீழ், சுமார் 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் தற்போது பயனடைந்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 15.75 இலட்சம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தினை விரிவுபடுத்த கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி ஆணை வெளியிடப்பட்டது.
அதன்படி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தினை, முதல்வர் ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாளை காலை 07.45 மணியளவில் தொடங்கி வைக்கவுள்ளார்.
அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைக்கவுள்ளனர். மேலும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் இந்த திட்டத்தினைத் தொடங்கி வைக்குமாறு அனைத்து கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
கடைசி விவசாயியிக்கு பாரட்டு; தேசிய விருதில் மலிவு அரசியல் கூடாது - முதல்வர் ஸ்டாலின்!
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பள்ளிகளில் காணப்பட்ட மிகச் சிறந்த பலன்களைக் கருத்தில் கொண்டு இந்தச் சீரிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
