Asianet News TamilAsianet News Tamil

நிர்மலா சீதாராமன், ராமதாஸை வறுத்தெடுத்த முதல்வர் ஸ்டாலின்!

தேர்தலில் போட்டியிட பணம் இல்லையென்றால் தேர்தல் பத்திரம் மூலம் வாங்கிய 12,000 கோடி ரூபாய் என்ன ஆச்சு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்

MK Stalin strongly criticized nirmala sitharaman and ramdoss smp
Author
First Published Mar 29, 2024, 9:34 PM IST

தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில், தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டு முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “பாஜக என்பது சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டும் கட்சி! சமத்துவம் என்றால், கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி. நம்முடைய நாட்டை மத – இன – சாதி - மொழி அடிப்படையில் பிளவுபடுத்திக் குளிர்காய வேண்டும் என்று நினைக்கும் கட்சிதான் பா.ஜ.க. அப்படிப்பட்ட, பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை, சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உண்டு. ஆனால், நான் பெரிதும் மதிக்கும் சமூகநீதி பேசும் அய்யா டாக்டர் ராமதாஸ் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும். சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் - சமூகநீதி பேசும் அய்யா ராமதாஸ் எப்படி கூட்டணி வைத்தார் என்பது, ஏதோ தங்கமலை இரகசியமெல்லாம் கிடையாது. இந்த தருமபுரி மக்களுக்கு நன்றாகவே தெரியும்! அவர் ஏன் மனதில்லாமல் அங்குச் சென்றிருக்கிறார் என்று உங்களுக்கு மட்டுமல்ல - அவர்கள் கட்சியினருக்கும் தெளிவாகத் தெரியும்.” என்றார்.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி முறிந்ததும், அ.தி.மு.க.வும் - பா.ம.க.வும் மாறி மாறி, அவர்கள் ஆட்சியில் வழங்கிய இடஒதுக்கீடு பற்றி, குற்றம் சொல்லுகிறார்களே? என்னவெல்லாம் பேசுகிறார்கள் என டி.வி.யில் பார்க்கிறோமே. அதையெல்லாம் இப்போது சொல்லி, இந்த மேடையின் கண்ணியத்தைக் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை என முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

ஆனால் சமூகநீதி பேசும் மருத்துவர் அய்யா அவர்கள், சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் கை கோத்த மர்மம் என்ன? பா.ம.க. வலியுறுத்தும் ஒரு கொள்கைக்குக்கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க! இது, மூத்த தலைவரான மருத்துவர் ஐயாவுக்குத் தெரியாதா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு திமுக செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டார். மேலும், வன்னியர் சமூக மக்களுக்கு திமுக செய்தவற்றையும் கூறி பிரசாரம் செய்தார்.

ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை: இந்திய வானிலை ஆய்வு மையம்!

நம்முடைய மக்களுக்கு வெள்ள பாதிப்பின்போது, நிவாரணம் கொடுத்ததைப் பிச்சை என்று சொன்ன மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என சொல்லியிருக்கிறார். இவரிடம் பணம் இல்லை என்றால் 12 ஆயிரம் கோடி தேர்தல் பத்திரமாக வாங்கி பா.ஜ.க. வேட்பாளர்கள் நிற்கிறார்களே? அந்தப் பணம் என்ன ஆனது? உங்களுக்குத் தர முடியாது என்று சொல்லிவிட்டார்களா? யாரைக் குற்றம்சாட்டுகிறார்? என முதல்வர் ஸ்டாலின் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தேர்தலில் போட்டியிட மக்களைச் சந்திக்க வேண்டும்! மக்களுக்காக உழைக்கத் தெரிய வேண்டும். மக்களைப் பற்றிய உண்மையான அக்கறை இருக்க வேண்டும். உங்களுக்கே தெரிந்துவிட்டது. தேர்தலில் நின்றால், மக்கள் உங்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று, தப்பிவிட்டீர்கள் என நிர்மலா சீதாராமனை முதல்வர் ஸ்டாலின் சாடினார்.

தமிழ்நாட்டு மக்கள் 2019 தேர்தலைப் போன்று, இந்தத் தேர்தலிலும் பா.ஜ.க.வை ஒதுக்கத்தான் போகிறார்கள். பா.ஜ.க.வுடன் வெளிப்படையாகக் கூட்டணி அமைத்திருப்பவர்களும், கள்ளக் கூட்டணியாகத் தமிழ்நாட்டிற்கு துரோகமிழைக்கும் பழனிசாமி கூட்டமும் தோற்கடிக்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios