Asianet News TamilAsianet News Tamil

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் - முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!

குழந்தைகளைத் துன்புறுத்துபவர்கள் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

MK Stalin order to file chargesheet against pocso act within 60 days smp
Author
First Published Sep 26, 2023, 5:09 PM IST

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் அடுத்த ஏழு, எட்டு மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தக் காலகட்டத்தில் சில முக்கியமான நினைவு நாட்கள் மற்றும் மத ரீதியான திருவிழாக்கள் நடைபெற உள்ளன. அதேபோல், அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.  ஆகையால், இந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை உருவாகாமல் மிக மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.” என அறிவுறுத்தினார்.

“பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே அவர்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். ஆகையால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்து படைகள் மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.” என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பாலியல் ரீதியாகக் குழந்தைகளைத் துன்புறுத்தும் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

“போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க வரும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தனி அக்கறையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட்டு அவர்களுடைய குழந்தையின் பெயர், அடையாளம் ஆகியவை காக்கப்பட வேண்டும். போக்சோ சட்டம் குறித்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்குக் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சென்று குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளை பற்றியும், அதேபோல் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்கள்பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரியப்படுத்த  அவசரகால உதவி எண்கள் / வாட்ஸ்-அப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அக்டோபர் மாதம் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்!

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை சில சமயங்களில், சில சமூக ஊடகச் செய்திகளால் ஏற்பட்டு விடுவதாக சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின், சமூக ஊடக பதிவுகளை தீவிரமாகக் கண்காணித்து அவற்றில் சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்பும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

நமது மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக, மேலும் வளர்ச்சி பெற, குற்ற நிகழ்வுகளை பெரிதும் குறைத்திடவும், தடுத்திடவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios