ஆளுநரை திரும்பப்பெறும் ஸ்டாலின் கோரிக்கை சரியானதே: கபில் சிபல்!
ஆளுநரை திரும்பப்பெறும் ஸ்டாலின் கோரிக்கை சரியானதே என மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஆளுநர் ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் 19 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், வகுப்புவாத வெறுப்பை தூண்டிவிட்டு மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக ஆளுநர் உள்ளதாகவும், தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மீது விவரிக்க முடியாத, ஆழமான வேருன்றிய பகைமை கொண்டவராக ஆளுநர் திகழ்கிறார் என கூறப்பட்டுள்ளது.
ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை என்ற முதல்வரின் கொள்கை பிடிப்பை விசிக வரவேற்கிறது - திருமாவளவன்
மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைக்கு ஆளுநர் வெளிப்படையாக முரண்படுகிறார். சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் செய்கிறார். அரசியலமைப்புக்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ரவி, அந்தப் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். அரசியல்வாதியாக மாறும் ஒரு ஆளுநர், அப்பதவியில் தொடரவே கூடாது என வலியுறுத்தியுள்ள முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் அந்த பதவியில் நீடிப்பதா, வேண்டாமா என்பதை குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விடுவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆளுநரை திரும்பப்பெறும் ஸ்டாலின் கோரிக்கை சரியானதே என மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநர் என்பவர் வெறும் அலங்கார நிர்வாகி. நிர்வாகத்தில் தலையிடும் அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை என்று அம்பேத்கர் கூறியிருந்தார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள், இந்துத்துவா செயல்திட்டத்தை கொண்டிருக்கிறார்கள்; ஆட்சியை சீர்குலைத்து தலையிட முயற்சிக்கிறார்கள்; வெறுப்பை தூண்டுகின்றனர். எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்குமாறு மு.க.ஸ்டாலின் கேட்பது சரியானதே.” என கபில் சிபல் பதிவிட்டுள்ளார்.