வயது மூப்பு காரணமாக உயிரிழந்த சாகித்திய அகாதமி விருது பெற்றவரும், செம்மொழி தமிழின் மூத்த கவிஞருமான ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “செம்மொழித் தமிழின் மூத்த கவிஞரும், சாகித்திய அகாதமி விருது பெற்றவருமான 'கவிஞர் ஈரோடு தமிழன்பன்' அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று சனிக்கிழமை (22.11.2025) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், சொல்லொணாத் துயரமும் அடைந்தேன்.

​ காங்கேயம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட, ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிறந்து, தமிழின் சிகரங்களைத் தொட்டவர் ஈரோடு தமிழன்பன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட மகா கவிஞர் இவர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கவிஞர் சாகித்திய அகாதமி விருது பெற்றதைப் பாராட்டும் விதமாக, சென்னை அண்ணா நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர்தரக் குடியிருப்பினை வழங்கி, அவர் வாழும் காலத்திலேயே அவரைப் பெருமைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

​ மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, லிமரைக்கூ எனத் தமிழ்க் கவிதையின் அனைத்து வடிவங்களிலும் தனது தனித்துவமான முத்திரையைப் பதித்தவர். இவரது 'வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை நூலுக்காக 2004-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதுதவிர தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.

​ கவிஞராக மட்டுமல்லாமல், சென்னைத் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி, தனது கம்பீரமான குரலால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். சிறந்த மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட ஒரு மாபெரும் ஆளுமையை இன்று தமிழ் இலக்கிய உலகம் இழந்து தவிக்கிறது. அன்னாரது மறைவு தமிழ் மொழிக்கும், இலக்கியத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், தமிழ்ப் பெருமக்களுக்கும் காங்கேயம் சட்டமன்ற உறப்பினர் என்ற வகையிலும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.