சிந்து வெளி எழுத்துகளை வெளிக்கொண்டு வருபவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் - முதல்வர் அறிவிப்பு
சிந்துவெளி பணிக்கான எழுத்து முறையை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சிந்து வெளி எழுந்துக்களை வெளிகொண்டு வரும் தொல்லியல் அறிஞர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் உள்ளிட்ட மூன்று அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு கருத்தரங்கம் இன்று முதல் வருகின்ற 7 ஆம் தேதி வரை என 3 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் சர் ஜான் மார்ஷல் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தொர்ந்து சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்; ஒரு வடிவவியல் ஆய்வு என்னும் நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் இந்த விழாவின் மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அரசு முன் நின்று நடத்தாத வகையில் மாபெரும் பண்பாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம் வரலாற்றையும், பெருமையை மீட்டவர் ஜான் மார்ஷல். அவரை கௌரவிப்பது தமிழ்நாடு அரசிற்கு பெருமை.
சிந்துவெளி எழுத்து வடிவ நாகரிகம் குறித்து விளக்கம் அளிக்கும் அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்கன் டாலர் வழங்கப்படும். சிந்துவெளி நாகரிக ஆராய்ச்சி மேற்கொள்ள தலை சிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க 2 கோடி ரூபாய் நல்கை வழங்கப்படும். கல்வெட்டு ஆய்வாளர்கள் ஆகியோர்களை ஊக்கவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார்.
தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. ஆராய்ச்சி முடிவுகள் மகிழ்ச்சி தருவதாக அமைந்திருக்கிறது. சிந்துவெளி நாகரிகத்தின் குறியீடுகளும் தமிழ்நாட்டில் கிடைக்கப்பெற்ற குறியீடுகளும் 60 விழுக்காடு குறியீடுகள் ஒரே தன்மையிலான குறியீடுகளாக காணப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் தமிழ்நாடு இரும்பு காலமும் சமகாலம் என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.