நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவு; முக அழகிரி நேரில் அஞ்சலி
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு சில சர்ச்சைகள் காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்தாா். சற்று இடைவேளைக்கு பின்னர் அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நாய் சேகர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி(87) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நடிகர் வடிவேலுவின் தாயாருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் வடிவேலு தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அதன் பின்னர் தான் அவர் திரைப்படங்களில் நடிப்பது மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.