ஸ்டாலினுக்கு சவால்

மின்துறையில் ஊழல் என்றால் எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளோம் என மின்சார துறை அமைச்சர் தங்கமணி கூறி உள்ளார்.தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களுக்கு, மின்துறையில் ஏற்பட்டுள்ள ஊழல்களே காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

இதற்கு மறுப்பு தெரிவித்து மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, குற்றங்கள் கண்டிபிடிக்க வேண்டும் என்பதற்காகவே யாரோ எழுதி கொடுத்த அறிக்கையை தவறாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் வெளியிட்டிருக்கிறார். 

தமிழகத்தில் இரண்டு நாட்களாக 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் மத்திய மின் தொகுப்பில் இருந்து  6,152 மெகாவாட் தமிழகத்துக்கு வர வேண்டியது. ஆனால் அவர்கள் கொடுத்ததோ 3334 மெகாவாட் மட்டும்தான்.பராமரிப்பு நாட்களின்போது காற்றாலை மின்சாரம் இல்லாமல் போய்விட்டது. 

காற்றாலை மின்சாரம் திடீரென்று நின்றதால் அனல் மின் நிலையத்தில் உடனடியாக உற்பத்தி செய்ய முடியாது. முழு உற்பத்தி வேண்டும் என்றால் கிட்ட தட்ட 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் தேவைப்படுகிறது.அந்த இரண்டு நாட்களில் ஏற்கனவே தமிழக மின்சார வாரிய பராமரிப்பு காரணமாக நாங்கள் எடுத்திருந்தோம். எப்போதும் நாங்கள் எடுக்கின்ற சூழ்நிலைதான். 

பராமரிப்பு காரணமாக மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய 3000 மெகாவாட் மின்சாரம் குறைந்து விட்டது. 2 நாட்கள் காற்றாலை மின்சாரம் குறைந்த காரணத்தால் ஒரு சில பகுதிகளில் அரை மணி நேரம் ஒரு மணி நேரம் என்று மின்சாரம் தடை பட்டது. இதனை மறுக்கவில்லை.

பராமரிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட காரணத்தால், இரண்டு நாட்கள் மின் தடை இருந்தது. தமிழகத்தில் மின் வெட்டை கண்டுபிடித்ததே திமுக அரசுதான் என்பது அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சி போவதற்கு மின்வெட்டுதான் காரணம் என்று அன்றைய தினம் மின்சார துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி அவர்களே சொல்லியிருக்கின்றார்.

அப்படி இருக்கின்றபோது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது பொல் நேற்றைய தினம், எதிர்கட்சி தலைவர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். மின்சார வாரியத்தில் தவறு நடந்து விட்டது. ஊழல் நடைபெற்று விட்டது. அதனால் தமிழகம் தற்போது மின் வெட்டுக்கு ஆளாகி உள்ளது என்று கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னதைப்போல தமிழகத்தில் மின் வெட்டு என்ற சூழ்நிலையே இல்லை. காற்றாலை மின்சாரம் நின்று விட்டது உடனடியாக அனல் மின் நிலையங்களை இயக்க முடியாத காரணத்தினால் சில பகுதிகளில் அரை மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. 

நிலக்கரி வாங்கிய தொகையையே ஊழல் என்று சொல்கிறவர் வேறு எங்கேயும் இல்லை. தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராகத்தான் இருக்க முடியும்.தமிழகத்தில் சாமானியன் ஆட்சி நடைபெறுவதை எதிர்கட்சி தலைவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, இந்த ஆட்சியைப் பற்றி ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக மின்சார வாரியத்தின் மீது குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார்.

மின்துறையில் ஊழல் என்றால் எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளோம். மின்சாரத்துறையில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் பணியிட மாறுதல் நடக்கிறது.  என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.