நாடாளும்ன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. எனவே தேர்தலை கருத்தில் கொண்டு கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழக பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த கடந்த வாரம் ஆளுநர் உரையோடு தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர். இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். இன்று மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் கூடுகிறது. அப்போது தமிழக அரசுக்கான 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டபேரவையில் இன்று நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், தமிழக அரசின் பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு ஏராளமாக உள்ளது. 

புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பா.?

இதனையடுத்து இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ள துறைகள் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, சமூகநீதி, கடைக்கோடி மனிதர்க்கும் நலவாய்ப்பு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப்பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற தலைப்பில் அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளது.காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்ப்பு, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட கேஸ் மானியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெறமா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழக அரசின் கடன் சுமை

தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார். அதில், வரும் ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 182.22 கோடியாக மேலும் உயரும் என்றும் திருத்த மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் அது19.30 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்திருந்தார். வரியல்லாத வருவாய் திருத்த மதிப்பீடுகளில் ரூ.15 ஆயிரத்து 309.40 கோடியாகவும், வரும் ஆண்டில், திருத்த மதிப்பீடுகளைவிட 32.10 சதவீதமாக உயர்ந்து, ரூ.20 ஆயிரத்து 223.51 கோடியாக வருவாய் இருக்கும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கணிக்கப்பட்டு இருந்தது. திருத்த மதிப்பீட்டில் மொத்த வருவாய் வரவினங்கள் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 659.67 கோடியாக மதிப்பிடப்பட்டு இருந்தது.

கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகுமா.?

வரும் ஆண்டில், நிதிப் பற்றாக்குறை ரூ.92 ஆயிரத்து 74.91 கோடி என அப்போது மதிப்பிடப்பட்டு இருந்தது. 31.3.2024 அன்று மொத்தக் கடன் நிலுவை ரூ.7 லட்சத்து 26 ஆயிரத்து 28.83 கோடியாகவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடனுக்கான வீதம் 25.63 எனவும் இருக்கும். இது, 15-ம் நிதிக்குழு நிர்ணயித்துள்ள 29.1 சதவீதம் என்ற எல்லைக்குள்ளாகவே இருக்கும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். இந்தநிலையில் தான் இந்தாண்டிற்காக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது தேர்தல் காலம் என்பதால் பல கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

தமிழக காங்கிரஸ் கட்சியில் அடுத்த விக்கெட் காலி.. பாஜகவில் இணையும் எம்.எல்.ஏ விஜயதாரணி.?