அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்.13 வரை நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மற்றும் சட்டவிரோத கைது ஆகிய இரண்டு வழக்குகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியின் பேரில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஆகஸ்ட் 8 முதல் 12ஆம் தேதி வரை அமலாக்கத்துறை விசாரித்தது.
அதன்பிறகு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அன்றைய தினமே அவர் மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையையும், 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரிவுபடுத்தப்படும்: முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்!
இதனிடையே, அவரது நீதிமன்றக் காவல் அடுத்தடுத்து நீடிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. அந்தவகையி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 13ஆம் தேதி வரை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.
முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை எம்பி எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என குழப்பம் நீடித்து வந்தது. இது தொடர்பான பிரச்சினையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.