கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரிவுபடுத்தப்படும்: முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்!
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரிவுபடுத்தப்பட வாய்புள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். அன்றைய தினமே பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. அடுத்த மாதம் முதல் மாதம்தோறும் 1ஆம் தேதி உரிமை தொகை வங்கி கணக்குக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும்தான் ரூ.1000 தருவதாக சொன்னது. ஆனால், உரிமைத் தொகையை பெற இப்போது பல்வேறு விதிகளை விதித்துள்ளது என ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதேசமயம், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் முதலில் பயனடையட்டும் என பெண்கள் மத்தியிலேயே ஆதரவுக் குரல்களும் எழுகின்றன.
கர்நாடகா பந்த்: வட்டாள் நாகராஜ் கைது!
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரிவுபடுத்தப்பட வாய்புள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் கவலைப்பட தேவையில்லை; ஒரு கோடியே எட்டு லட்சம் பேர் என்பது முதல் கட்ட இலக்கு மட்டுமே. நிதிநிலை சீரானதும் அந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட வாய்ப்பிருப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.” என கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த தகவல் பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பல மணிநேர உழைப்பு தரப்படும் அங்கீகாரமே கலைஞர் மகளிர் உரிமை தொகை என்பதால், திட்டத்தின் நோக்கத்தை கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்து மகளிருக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.