Asianet News TamilAsianet News Tamil

கர்நாடகா பந்த்: வட்டாள் நாகராஜ் கைது!

கன்னட சலவலி அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்

Karnataka bandh pro kannada organisation leader vatal nagaraj arrested smp
Author
First Published Sep 29, 2023, 3:28 PM IST

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை, உச்ச நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட கூடாது என வலியுறுத்தி, தலைநகர் பெங்களூருவில் கடந்த 26ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று பந்த் நடைபெற்று வருகிறது. கன்னட சலவலி அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜ் தலைமையிலான பல்வேறு கன்னட அமைப்புகள் ஒருங்கிணைந்த ‘கன்னட ஒக்குடா’ சார்பில் கர்நாடக மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கர்நாடக முழு அடைப்பு போராட்டத்தால் அம்மாநிலத்தில்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை நிலவரப்படி, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிச்செல்லும் 22 விமானங்களும், உள்வரும் 22 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு சில பேருந்துகளே ஓடுகின்றன. அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் தவிர, மற்றவை மூடப்பட்டுள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு 2000 கன்னட அமைப்புகளும், பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் கர்நாடக மாநிலமே முடங்கியுள்ளது.

இந்த நிலையில், கன்னட சலவலி அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில்க் ஈடுபட்ட கன்னட ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளது. பெங்களூருவில் நேற்று நள்ளிரவு முதல் இன்று  நள்ளிரவு வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் கைது செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா: ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி அளித்த ஆந்திர முதல்வர்!

“கர்நாடக அரசு பந்த்தை ஆதரிக்கவில்லை. போராட்டம் நடத்தக் கூடாது என போலீசார் அழுத்தம் கொடுக்கின்றனர். கர்நாடகா காவல்துறை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. போலீசார் குண்டர்கள் போல் செயல்படுகின்றனர்.” என வட்டாள் நாகராஜ் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, தமிழகத்துடன் காவிரி நதிநீர் பங்கீட்டுக்கு எதிராக போராட்டத்துக்கு தலைமை தாங்கும் வட்டாள் நாகராஜ், பிளாஸ்டிக் குடத்துடன் பர்தா அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios