அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 15ஆவது முறையாக நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 15ஆவது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டக் கொண்டே வருகிறது. அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 22ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர மறுத்து விட்டது.
Swachh Survekshan report இந்தியாவின் தூய்மை நகரம்: 7ஆவது முறையாக இந்தூர் முதலிடம்!
இருப்பினும், மருத்து ஜாமீன் கோராமல் சாதாரண ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும் செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 3ஆவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை செந்தில் பாலாஜியின் ஜாமீன் நாளை நிராகரிக்கப்படும்பட்சத்தில், பொங்கல் பண்டிகையை அவர் சிறையிலேயே கழிக்க வேண்டியதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.