இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் 7ஆவது முறையாக தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறார். அதனடிப்பயில் தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வச் சர்வேக்ஷன் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016ஆம் ஆண்டி பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
ஸ்வச் பாரத் அபியானின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை பல்வேறு பிரிவுகளின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான ஸ்வச் சுவேக்ஷன் முடிவுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டார். அதன்படி, இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் 7ஆவது முறையாக தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
மேலும், முதல் முறையாக இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பட்டத்தை குஜராத் மாநிலம் சூரத்தும் பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டு ஸ்வச் சுவேக்ஷன் முடிவுகளின்படி, இந்தூர், சூரத் ஆகிய இரண்டு இடங்கள் தூய்மை நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளன. கடந்த 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் 2ஆம் இடம் பிடித்த சூரத் 2023ஆம் ஆண்டில் முதலிடத்தை இந்தூருடன் பகிர்ந்து கொண்டுள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாட்டின் தூய்மை நகரங்களின் இந்த பட்டியலில், மகாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பை மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதேபோல், ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் மகாராஷ்டிராவின் சாஸ்வாட் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பிரிவில், சத்தீஸ்கர் மாநிலம் படான் மற்றும் மகாராஷ்டிராவின் லோனாவாலா ஆகிய இரண்டு நகரங்களும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன.
கன்டோன்மென்ட் வாரியங்கள் பிரிவில், மாவ் கண்டோன்மென்ட் முதலிடத்தையும், கங்கை நகரங்களில் வாரணாசி சிறந்த விருதையும் பெற்றுள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை தூய்மையான மாநிலங்களாக உருவெடுத்துள்ளன.

நகர்ப்புற தூய்மைக் கணக்கெடுப்பின் 8ஆவது பதிப்பின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதனை, உலகின் மிகப்பெரிய நகர்ப்புற தூய்மை கணக்கெடுப்பு என்று அரசாங்கம் கூறுகிறது. 2016 இல் தொடங்கிய இந்த கணக்கெடுப்பு, ஆரம்பத்தில் 73 முக்கிய நகரங்களை மட்டுமே உள்ளடக்கியிருந்தது. 2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4,477 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்துக்கு மேலும் 5 விமான நிலையங்கள்: ஜோதிராதித்ய சிந்தியா தகவல்!
குப்பைகளை கையாளதல், பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகித்தல், குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்தல், தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்தல் போன்ற கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, மேற்கண்ட தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக சுமார் 409 மில்லியன் மக்களை உள்ளடக்கிய இந்த கணக்கெடுப்பில், சுமார் 12 கோடி பேரிடம் பதில்கள் பெறப்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு முறைகள், வழிகளின் மூலம் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.
