உத்தரப்பிரதேசத்துக்கு மேலும் 5 விமான நிலையங்கள்: ஜோதிராதித்ய சிந்தியா தகவல்!
உத்தரபிரதேசத்தில் மேலும் 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு மாதத்தில் 5 புதிய விமான நிலையங்கள் திறக்கப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். அகமதாபாத் இருந்து அயோத்தி வரை முதல் விமான சேவை இன்று தொடங்கியுள்ளது. இண்டிகோ விமான நிறுவனத்தின் இந்த சேவையை துவக்கி வைக்கும் விழாவில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பெரிய விமானங்கள் தரையிறங்குவதற்கும் சர்வதேச விமானங்களை இயக்குவதற்கும் அனுமதி அளிக்கும் வகையில், அயோத்தி விமான நிலையம் விரிவுபடுத்தப்படும்; அதன் ஓடுபாதை நீட்டிக்கப்படும் என்றார்.
மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு மாதத்தில் ஐந்து விமான நிலையங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். அசம்கர், அலிகார், மொராதாபாத், சித்ரகூட் மற்றும் ஷ்ரவஸ்தி ஆகிய நகரங்களில் விமான நிலையம் அமைக்கப்படும் என அவர் கூறினார். இதன் மூலம் அம்மாநிலத்தில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரிக்கும்.
அயோத்தி விமான நிலையம் குறித்து பேசுகையில், இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். இதன் மூலம் பல விமானங்கள் அயோத்தியை உலகத்துடன் இணைக்கும் எனவும் அவர் கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. அதில், ஒன்று விமான நிலையம். அயோத்தியில் சிறிய அளவில் விமான நிலையம் இருந்து வந்த நிலையில், அங்கு தற்போது பெரிய அளவில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ள அந்த விமான நிலையத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி திறந்து வைத்தார். அன்றைய தினம் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் அயோத்திக்கு இயக்கப்பட்டன.
ஒரே நாடு ஒரே தேர்தல்: பொதுமக்களிடம் 5000 கருத்துக்களை பெற்ற உயர்மட்ட குழு!
அயோத்தி புதிய சர்வதேச விமான நிலையத்தில் 24 விமானங்களை ஒரே சமயத்தில் நிறுத்தி வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் பிரதான கட்டிடம் ராமர் கோவில் வடிவத்திலே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீராமரின் சின்னமான வில், அம்பு மற்றும் இதர புராண சின்னங்கள் விமான நிலையத்தில் சுவர்களில் அழகிய வண்ணங்களில் தீட்டப்பட்டுள்ளன. இந்த விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை பெரிய அளவில் அமைப்பதற்காக மாநில அரசு 821 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளது. விமான நிலைய கட்டுமானப் பணிகளை, இந்திய விமான போக்குவரத்து ஆணையகம் மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக 60 நபர்கள் வரை செல்லும் சிறிய வகை விமானங்கள் மட்டும் இயக்கப்பட உள்ளன. விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பணிகள் 2025ஆம் ஆண்டு முழுமையாக நிறைவு பெறும்போது பெரிய ரக விமானங்களை இயக்கப்படும் என தெரிகிறது.