நாராயணசாமி நாயுடு இல்லத்தை நூலகமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது நூற்றாண்டு விழாவிற்குள் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நாராயணசாமி நாயுடு பிறந்தநாள் விழா
கோவை மாவட்டம் செங்காளிபாளையம் பகுதியில் பிறந்து விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து உழவர் பெருந்தலைவர் என போற்றப்படும் நாராயணசாமி நாயுடு அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள், பொதுமக்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழக அரசு சார்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியும் நாராயணசாமி நாயுடு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது நாராயணசாமி நாயுடுவின் மகள் பிரபாதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் அமைச்சரிடமும்,மாவட்ட ஆட்சியரிடமும் சில கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
நூலகமாக மாற்ற நடவடிக்கை
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்த நாளையொட்டி அரசின் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது பெருமையாக உள்ளதாக தெரிவித்தார். இந்த பகுதியில் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவாக நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என்றும் அவர் வாழ்ந்த இல்லத்தை நூலகமாக மாற்ற வேண்டும் என அவரது குடும்பத்தார் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு விழாவிற்குள் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
அதிமுகவின் பிளவுக்கு காரணமே பாஜக தான்.! இப்போவாவது எம்ஜிஆரின் தொண்டர்கள் உணர வேண்டும்- துரை வைகோ
