TASMAC : டாஸ்மாக்கில் முறைகேடு.. புகார் அளிக்கலாம்... அமைச்சர் செந்தில் பாலாஜி
டாஸ்மாக்கில் முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 71 மாற்று திறனாளிகள் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்காக பணி நியமன ஆணைகள் வழங்கினார் அமைச்சர் செந்தில் பாலாஜி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நாளை முதல் கோவை மாவட்டத்தில் வீடுகள் வாரியாகப் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளது. கணக்கெடுப்பின் பொழுது மாற்றுத்திறனாளிகள் தங்களின் தேவைகளை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசியது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவினர் அவர்களுடன் பயணித்தவர்களை தக்க வைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும், ஒருவருக்குத் தோல்வி பயம் ஏற்படும்போது தான் கோபம் வரும் எனவும் அந்த நிலையில் தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், ‘ இனிவரும் காலங்களில் அவர்கள் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மதுபானக் கடைகளை பொறுத்தவரை மக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் 134 பணியாளர்கள் தற்போது வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள மின்சார திருத்த மசோதாவிற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்டம் விவசாயிகளுக்கு ஒரு கேள்விக் குறியான சட்டம் என முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இனி நடக்க இருப்பதை பொறுத்திருந்து காண வேண்டும்’ என்று கூறினார்.