உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணி ஏன் இல்லை.!நானும் பீஃப் சாப்பிடுபவன் தான்.!-மா.சுப்பிரமணியன் புதிய விளக்கம்
உணவு என்பது தனி மனித உரிமை பீப் பிரியாணி அரங்கம் அமைக்க பீஃப் பிரியாணி கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தீவு திடலில் சிங்கார சென்னை உணவு திருவிழா 2022 இன்று தொடங்கி 14ஆம் தேதி வரை உள்ளது அதை துவக்க விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், சிங்காரச் சென்னை உணவு திருவிழா என்ற தலைப்பில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் தமிழகத்தின் பாரம்பரிய உணவு சுவை மிக்க உணவு, உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத உணவுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 150 அரங்குகள் மூலம் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை, சிறுதானிய உணவுகள் உட்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு இந்த உணவு கண்காட்சியின் மூலம் ஏற்படுத்தப்படும் என்றார்.
மேலும், இந்த உணவுத் திருவிழாவில் தினம்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று உணவுகளை சுவைப்பதுடன் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் எத்தகைய உணவு முறைகள் தங்கள் உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப உணவு பாதுகாப்புத் துறையில் மூன்று அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது அதில் ஒன்று சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பொருட்களின் விற்கும் நடைமுறைக்கு எதிரான விழிப்புணர்வு, உணவுப் பொருட்களின் லேபல்களில் பார்த்து தெரிந்து அறிந்து கொண்ட பிறகு பொருட்களை வாங்க வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது என்றார். அதுபோன்ற எண்ணையை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் அதை அரசாங்கமே ஒரு லிட்டருக்கு ₹30 என்று வாங்கிக் கொண்டு அதை மாற்ற பொருளாக பயோடீசல் என்று பயன்படுத்த இருக்கிறோம் என்று அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் 23.33 லட்சம் லிட்டர் எண்ணெய் பெரிய நிறுவனங்களிடமிருந்து ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது என மா.சுப்பிரமணியன் தெரிவி்த்தார்.
மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் நிகழ்ச்சிகளில் வீணாகும் உணவை அரசு பெற்றுக் கொண்டு பசியால் வாடும் 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.மேலும், இந்த உணவு கண்காட்சியில் மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளுக்கு தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பீஃப் பிரியாணிக்கு ஏன் அரங்க அமைக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், நான் கூட பீஃப் பிரியாணி சாப்பிடுவேன், உணவு என்பது தனி மனித உரிமை பீஃப் பிரியாணி அரங்கம் அமைக்க அமைக்க கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அனுமதி வழங்கப்பட்டு இருப்போம் என தெரிவித்தார்.
.இதையும் படியுங்கள்