minister kamaraj explanation for salem dengue death

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சேலத்திலும் மதுரையிலும் டெங்கு பாதிப்பு அதிதீவிரமாக உள்ளது.

சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களை சேலத்தில் டெங்குவிற்கு அதிகமானோர் பலியாகி வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் டெங்குவிற்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், சேலத்தில் டெங்குவால் அதிகமானோர் உயிரிழப்பதற்கு காரணம் என அமைச்சர் காமராஜ், ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். சேலம் மாவட்டம் பெரிய மாவட்டம் என்பதால் டெங்குவால் அதிகமானோர் உயிரிழப்பதாக விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் காமாராஜ்.

அப்படி பார்க்கப்போனால், அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம் கோயம்பத்தூர். பரப்பளவில் பெரியது ஈரோடு மாவட்டம். அமைச்சர் சொல்லும் வகையில் பார்த்தால், இந்த மாவட்டங்களில் அல்லவா அதிகமானோர் உயிரிழந்திருக்க வேண்டும். இது எல்லாம் ஒரு விளக்கம்னு அமைச்சர் சொல்றாரு பாருங்க?

சேலம் அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவித்திருந்த நிலையில், அதுதொடர்பாக மருத்துவமனையில் ஆய்வு நடத்தி சிகிச்சையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். மேலும் சேலம் மாவட்டத்தில் டெங்கு பரவுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதைக் களைவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

இதையெல்லாம் செய்யாமல், ஏதாவது விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதற்காக வாயில் வருவதை எல்லாம் பேசிவிட்டுப் போகலாமா? என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு முன் அமைச்சர் காமராஜரைப் போல, அரிய கண்டுபிடிப்புகளை சில அமைச்சர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமைச்சர் செல்லூர் ராஜூ, வைகை ஆற்றை தெர்மாகோல் போட்டு மூட முயன்று பிரபலமானவர்.

நொய்யல் ஆற்றில் கலந்த சாய சலவை ஆலைகளின் ரசாயன கழிவை மக்கள் சோப்பு போட்டு குளித்த கழிவுநீர் என விளக்கமளித்தார் அமைச்சர் கருப்பண்ணன்.

அமைச்சர்களின் இந்த அரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின.

அந்த வரிசையில் தற்போது அமைச்சர் காமராஜும் இணைந்துள்ளார். சேலம் பெரிய மாவட்டம் என்பதால்தான் அதிகமானோர் டெங்குவிற்கு பலியாகினராம்.

என்னத்த சொல்றது போங்க....