சென்னையை மிரட்டும் மிக்ஜம் புயல்.. கடும் கொந்தளிப்பில் கடல் - தீவு போல காட்சி தரும் மெரினா கடற்கரை! வீடியோ!
Chennai Marina Beach : டிசம்பர் மாதமும், புயலும் பிரிக்க முடியாத இரு விஷயங்களாக மாறிவிட்டது என்றே கூறலாம். அந்த வகையில் தற்பொழுது வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுப்பெறும் என்று கூறப்படுகிறது.
தற்பொழுது வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கின்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று டிசம்பர் 3ஆம் தேதி இரவுக்குள் புயலாக உருமாறி வலுபெரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளது. நேற்று டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் தென்மேற்கு வங்க கடலில், புதுச்சேரியில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
தற்பொழுது வடமேற்கு திசை நோக்கி அது நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் அது புயலாக வலுவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை டிசம்பர் 4ம் தேதி திங்கட்கிழமை காலை தெற்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோர பகுதிகளில் அது நிலைகூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. மேலும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணா நகர், கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வளசரவாக்கம் மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கடலும் கொந்தளிப்பாக காணப்படுவதால் மக்கள் தேவையின்றி கடற்கரை பக்கம் செல்ல வேண்டாம் என்று அறிவிப்புகள் தற்பொழுது வெளியாகி வருகிறது. இந்த சூழலில் மெரினா கடற்கரையில் அதிக அளவில் தண்ணீர் உள்ளே வருவதால் ஒரு தீவு போல மெரினா கடற்கரை தற்பொழுது காட்சியளித்து வருகிறது.