புரட்சித் தலைவரான புரட்சி நடிகர்: ஏழை பங்காளர் எம்ஜிஆர்!
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
அதிமுகவின் நிறுவனரும், தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 36ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் ஒரு சிலர் தான் எப்போதும் நினைவில் நிற்பார்கள். அந்த வகையில், எளிமை, கண்ணியம், நேர்மை என சகல பண்புகளையும் தன்னகத்தேக் கொண்டு மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு என்றும் அமர்ந்திருப்பவர் ஏழைகளின் எஜமான் எம்ஜிஆர்.
கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு ஆகியவை மட்டுமே தந்தை பெரியாரின் கொள்கைகள் என சுருக்கப்பட்ட நேரத்தில்; சாதிய கட்டுமானத்தைக் குலைப்பதும் தளரச் செய்வதுமே பெரியாரியத்தின் முதன்மையான பணி என்பது அவரது ஆயுட்காலத்திலேயே ஏறக்குறைய மறக்கப்பட்ட சூழ்நிலையில் எம்.ஜி.ஆர் எடுத்த இரண்டு நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் சிவில் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
தந்தை பெரியார் நூற்றாண்டின்போது அவர் பிறப்பித்த அரசாணை. தமிழ்நாட்டுத் தெருக்களின் பெயர்களில் இருந்த சாதிப் பின்னொட்டை நீக்கி அவர் பிறப்பித்த அந்த அரசாணை சாதியவாதிகளை சமூகநீதிக் காவலர்கள் எனக் கொண்டாடும் தமிழ்நாட்டுச் சூழலில் மிகவும் புரட்சிகரமானது.
பாரம்பரியமாக இருந்துவந்த கர்ணம், மணியம் பதவிகளை ஒழித்து கிராம நிர்வாக அலுவலர் என்ற பதவியை உருவாக்கியது இரண்டாவது சமூகப் புரட்சி. தமிழ்நாட்டில் நிலவுரிமை தொடர்பாக ஆய்வு செய்கிறவர்கள் கர்ணம் மணியம் ஆகியோரின் தில்லுமுல்லுகள் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி பாதுகாத்தன என்பதை அறிவார்கள். அதனை ஒழித்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் மீது ஆயிரக்கணக்கில் விமர்சனங்கள் இருந்தபோதும், அவரது ஆட்சி காலத்தில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோதும், இதுபோன்று பல்வேறு புரட்சிகளை செய்து புரட்சி நடிகரான எம்ஜிஆர், புரட்சித் தலைவரானார்.
தொடர்ந்து 10 ஆண்டுகள் மக்களின் முதல்வராக பணியாற்றி அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டார். ஏழை எளியவர்களின் துயர் துடைக்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அவற்றில் மறக்க முடியாதது பள்ளிகளில் சத்துணவு திட்டம். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத்திட்டமாக மாற்றி தமிழ்நாடு முழுமைக்கும் செயல்படுத்தினார்.
தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு..! நேரடியாக களத்தில் இறங்கி பார்வையிடும் நிர்மலா சீதாராமன்
மருத்துவமனையில் படுத்துக்கொண்டே தேர்தலில் வெற்றிபெற்று அரியணை ஏறியவரும் இவர்தான். அந்த வகையில், ஏழை பங்காளனாக வாழ்ந்தவர் எம்ஜிஆர். ஏழைப் பங்காளராகவும் எளியோரின் துயர் துடைப்பவராகவும் படங்களில் நடிப்பார். அதற்குக் காரணம், அடிப்படையிலேயே அவர் ஏழை எளியோருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனால், தனது குணநலனுக்கு ஏற்பவே, தான் நடிக்கும் பாத்திரங்களை தேர்வு செய்தார். அதோடு, சாதாரண மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதாக இருக்கும். அனைத்து தரப்பு மக்களின் வேடங்களையும் படத்தில் ஏற்று நடித்தவர். இது அவர் தங்களில் ஒருவர் என்ற எண்ணத்தை எளிய மக்களிடம் ஏற்படுத்தியது.
எம்ஜிஆர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் தமிழ்ச் சமூகத்தில் அவரது கீர்த்தியும் அவர் குறித்த வழிபாட்டுணர்வும் எளிய மக்கள் மத்தியில் குறையவேயில்லை. அதற்கு காரணம் அவர் நடித்த படங்களும், ஆட்சி காலத்தில் அவர் கொண்டு வந்த சில திட்டங்களுமே ஆகும். அவை, எம்ஜிஆர் என்ற பிம்பத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஒரு சிலருக்கு மட்டுமே முகராசி இருக்கும். அப்படி ஒரு முகராசி தமிழ்ப் பாட்டாளிகள் சமூகத்தின் மத்தியில் எம்ஜிஆருக்கு மட்டுமே அமைந்தது.