Metro trains running without driver
சென்னையில், இரண்டாவது கட்ட மெட்ரோ ரயிலில் டிரைவர்கள் இல்லாமல் ரயில்கள் ஓடத்துவங்கும் என்று மெட்ரோ திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2-வது கட்ட பணி இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மெட்ரோ ரயில் திட்டம் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையும் மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையும் போடப்பட உள்ளது. சுமார் 108 கிலோ மீட்டர் தொலைவுக்கு போடப்பட உள்ளது.

ரூ.44,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இரண்டாவது மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய இறுதி அறிக்கையை சி.எம்.எல்.ஆர்.ஐ. ஜப்பான் நிறுவனத்திடம் தாக்கல் செய்துள்ளது. 2018 முதல் காலாண்டில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு அமைப்பு இதற்கான முதல்கட்ட நிதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில், டிரைவர் இல்லாமல் தானியங்கி தொழில்நுட்ப அடிப்படையில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயிலின் இயக்கத்தைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பதற்கான வசதி செய்யப்படும் என்றும், இந்த கொள்கைக்கான இறுதி அறிவிப்பை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் அறிவிக்கும் என்றும் தெரிகிறது.

இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள், டிரைவர் இல்லாத ரயிலில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும் என்றனர். தற்போது ஒவ்வொரு பகுதியிலும் சிக்னல் அமைக்கப்படும் முறையை மாற்றி மத்திய கட்டுப்பாட்டு அறையிலேயே சிக்னல் முறையும் அமைக்கப்படும் என்றனர்.

தற்போது முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் டிரைவர்களின் பணி மிக குறைவானதாகவே உள்ளது என்றும், ரயிலின் இயக்கம் அனைத்தும கட்டுப்பாட்டு அறையின் மூலம் நடப்பதாகவும், ஓட்டுநர்கள் கதவுகளின் இயக்கம் மற்றும் ஸ்டார்ட் பட்டனை அழுத்துவது போன்றவற்றை மட்டுமே செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
