metro train ticket price hike

சென்னை மெட்ரோ ரயில்களில் தற்போது விதிக்கப்படும் கட்டணத்தை விட அனைத்து பகுதியையும் உள்ளடக்கி 20 ரூபாய் கூடுதலாக நிர்ணயம் செய்ய மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக,.19,000 கோடி ரூபாய் முதலீட்டில் 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு, மெட்ரோ ரயில் நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணா சாலை, கிண்டி வழியாக, மீனம்பாக்கம் விமான நிலையம் வரை, சென்னை கடற்கரையில் இருந்து, அண்ணா நகர், கோயம்பேடு வழியாக, பல்லாவரம் வரையும் 2 கட்டங்களாக பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தொலைவில் உயர்மட்ட ரயில் பாதை நிறுவப்பட்டு, 2015ம் ஆண்டு ஜூன் முதல் மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது.

இதே போன்று கோயம்பேடு- பரங்கிமலை, சின்னமலை- விமான நிலையம் இடையே உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் மேலும் 35 கிலோ மீட்டர் தொலைவுக்கு, வண்ணாரப்பேட்டை முதல் மீனம்பாக்கம் வரை மெட்ரோ பாதை நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இதற்கான முதல்கட்டப் பணிகள், 2017ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும் என்றும், அதற்கடுத்த சில மாதங்களில் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த மெட்ரோ ரயிலில் தற்போது 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை சாதாரண வகுப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய இந்த கட்டணம் இரு மடங்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது விதிக்கப்படும் கட்டணத்தை விட அனைத்து பகுதியும் உள்ளடக்கி மேலும் 20 ரூபாய் கூடுதலாக அதாவது 70 ரூபாய் நிர்ணயம் செய்ய மெட்ரோ ரயில் முடிவு செய்துள்ளது.

இந்த கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில் நாட்டிலேயே தமிழகத்தில்தான் மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகம் என்ற நிலை ஏற்படும். சாதாரண கட்டணம் 70 ரூபாயாக உயரும் பட்சத்தில் சிறப்பு வகுப்பு பயணத்திற்கு 140 ரூபாயாக உயர வாய்ப்பு உள்ளது என்றுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.