சென்னை நகரில் வண்ணாரப்பேட்டை முதல் மீனம்பாக்கம் வரையும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் சேவைக்கான பணி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.

கடந்த ஆண்டு, கோயம்பேட்டில் இருந்து பரங்கி மலை வரையும், பின்னர் பரங்கி மலையில் இருந்து கோயம்பேடு வரையும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு, தற்போது வரை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை எழும்பூர் அருகே நேரு பூங்காவில் இருந்து திருமங்கலம் வரை பூமிக்கடியில் சுரங்க வழியாக மெட்ரோ ரயில் சேவையை தொடங்கும் நிகழ்ச்சி, தற்போது தொடங்கியது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். பின்னர், மத்தய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கொடியசைத்து, ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார், செங்கோட்டையன், வேலுமணி, உதயகுமார் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மெட்ரோ ரயில் சேவை, சுமார் 5 மாடி கட்டிடத்தின் அளவுக்கு பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு, காற்றோட்டம், சுவாச சம்பந்தப்பட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சுமார் ஏழரை நிமிடத்தில் 7 ரயில் நிலையங்களை கடந்து செல்லும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.