Weather Update: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது, மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

தமிழகத்தில் தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வரும் நாட்களில் 2 முதல் 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதாவது தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும என தெரிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மார்ச் 30 தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் மார்ச் 31 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 1ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 02 தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

வெயில் அதிகரிக்கும்

மேலும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.