மருத்துவ கலந்தாய்வில் கேரள மாணவர்கள் மோசடியா ? போலி சான்றிதழ் கொடுத்து எம்.பி.பி.எஸ். சேர முயற்சி !!!

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 9  கேரள மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்த எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.

நேற்று மாற்றுத் திறனாளகளுக்கான கலந்தாய்வை சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தொடங்கி வைத்தார். இந்நிலையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களில் கேரளாவைச் சேர்ந்த 9 பேர் போலி இருப்பிடச் சான்றுடன் கலந்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

கேரளாவில் நடைபெறும் மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைப்பது கடினம் என்பதால் அவர்கள் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை  முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், முறைகேட்டில் ஈடுபட்ட கேரள மாணவர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.