எல்லோர் பார்வையும்  திருவாரூர் இடைத்தேர்தலில் குவிந்திருக்க, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவரது பார்வை மட்டும் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தலில் குவிந்திருக்கிறது. அவர் யார்? அடிக்கடி சர்ச்சையாகப் பேசி சிக்கிக்கொள்பவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர்தான் அவர்.

மயிலாடுதுறை தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வென்றவர் இவர். ஒரு முறை மத்திய அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டிய சூழல் வந்தபோது தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டார்கள். வேறு சில தலைவர்கள் தங்கள் வாரிசுகளை களத்தில் இறக்கி  அமைதியாகிவிட்டார்கள். 

ஆனால், மணிசங்கர் அய்யர் மட்டும் பின்வாங்காமல் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 58 ஆயிரம் வாக்குகளை மட்டுமே வாங்கி தோல்வியடைந்தார். இந்தமுறை திமுக கூட்டணியில் விட்டதைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மணிசங்கர். கடந்த காலங்களில் திமுக இந்தத் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கே விட்டுக்கொடுத்து வந்திருக்கிறது. 2014-ல் மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்தத் தொகுதியை  திமுக கொடுத்தது. 

இந்த முறை மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளதால், மயிலாடுதுறை தொகுதி கிடைக்கும் என்ற ஆவலில் மணிசங்கர் தொகுதியைச் சுற்றி வலம்வரத் தொடங்கியிருக்கிறார். பூத் கமிட்டிகளை அமைப்பது, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்திப்பது எனப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளார். ஆனால், மணிசங்கர் அய்யருக்கு தற்போது 79 வயதாகிவிட்டது. 

பிரதமர் மோடியை மோசமாக விமர்சித்ததால், கட்சியிலிருந்தும் அவர்  நீக்கப்பட்டார். பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வதால், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸுக்குக் கிடைத்தாலும் இந்த முறை மணிசங்கருக்கு தொகுதி கிடைக்காது என்று உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் கூறி வருகிறார்கள்.  

ஆனால், தனது அப்பா ராஜிவ் காந்திக்கு நெருக்கமானவர் என்ற வகையில் இந்த முறையும் ராகுல் மயிலாடுதுறை தொகுதியை ஒதுக்குவார் என்ற நம்பிக்கையில் உள்ளார் மணிசங்கர் அய்யர். அந்த நம்பிக்கையில் தான் மயிலாடுதுறையில் ஓசையில்லாமல் தேர்தல் பணிகளைச் செய்து வருகிறார் மணிசங்கர் அய்யர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் தவறாமல் மயிலாடுதுறையில் ஆஜராகிவிடுகிறார்.