Marxist Communist against police planned to start a struggle State Secretary says...

தூத்துக்குடி

கண்மூடித்தனமான அடக்கு முறையை கையாண்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளை திரட்டி காவல் துறைக்கு பாடம் புகட்ட போராட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

தூத்துக்குடியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் புதிய மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அதன்பின்னர் அவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 22–வது மாநில மாநாடு கடந்த 17–ஆம் தேதி தொடங்கி இன்று மாலை (அதாவது நேற்று) வரை தூத்துக்குடியில் நடந்தது.

இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து 700–க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் தமிழக மக்களை பாதிக்கக்கூடிய 60–க்கும் மேற்பட்ட பிரச்சனைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழக அரசாங்கம் கேட்டும் நிதியை கொடுக்க மறுக்கிறது. தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனையே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு உள்ளது.

மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதா அரசு ஒரு மோசமான பொருளாதார கொள்கையை கடைபிடிக்கிறது. இதனை தமிழக அரசு தட்டி கேட்காமல் மத்திய பா.ஜனதா அரசுக்கு எடுபிடியாக செயல்படுகிறது.

குறிப்பாக நீட் தேர்வில் நமக்கு விலக்கு கிடைக்கவில்லை. வறட்சி, ஓகி புயல் போன்றவற்றுக்கான நிவாரணம் கிடைக்கவில்லை.

தமிழகத்துக்கான அரிசியின் அளவை குறைத்துவிட்டனர். வருங்காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு சாப்பிடுவதற்கு விநியோகிக்க அரிசி இருக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மத்திய, மாநில அரசுகளின் மோசமான பொருளாதார நடவடிக்கைகளை எதிர்த்து வருகிற ஏப்ரல் மாதம் தமிழகத்தில் மாற்று கொள்கைகளை பிரசாரம் செய்யக்கூடிய பிரசார பயணங்களை மேற்கொள்வது என்றும், வருகிற காலங்களில் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. என்ற இரண்டு சக்திகளை வீழ்த்துவதற்கான நடைமுறைகளை உருவாக்குவது என்றும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (அதாவது நேற்று) நடந்த செந்தொண்டர் அணிவகுப்பின்போது, காவல் துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி உள்ளனர். இதில் சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இதுபோன்ற கண்மூடித்தனமான அடக்கு முறையை கையாண்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளை திரட்டி காவல் துறைக்கு பாடம் புகட்ட பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.