திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமக்கள் சென்ற கார், கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்த இருவரின் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்தூர் மயிலாபுரத்தை அருண்சங்கர் என்பவருக்கும் உடுமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த போடிபட்டியை சேர்ந்த குருராஜ் என்பவரது மகள் மஞ்சுளாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற இருந்தது. இதைத்தொடர்ந்து இரு வீட்டாரும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், கடந்த 20-ந்தேதி வழக்கம் போல் மஞ்சுளா பள்ளிக்கு வேலைக்கு சென்றார். அதன்பின்னர் மாலையில் பள்ளி முடிந்ததும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவருடைய பெற்றோர்கள் அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

மஞ்சுளாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த அருண்சங்கர் செல்போன் எண்ணையும் அவர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர். அந்த செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பள்ளி நிர்வாகத்தில் விசாரித்தபோது மஞ்சுளா பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, உடுமலை போலீசில் குருராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுளாவை தேடி வந்தனர். கடந்த 20-ந்தேதி இரவு முதல் நேற்றுமுன்தினம் வரை தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் வாளவாடி அருகே பி.ஏ.பி. கால்வாயில் நேற்று தண்ணீர் குறைந்து ஓடியது. கால்வாய் அருகே சென்ற ஒரு விவசாயி கால்வாய்க்குள் மூழ்கிய நிலையில் ஒரு கார் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து உடுமலை மற்றும் தளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் கால்வாய்க்குள் மூழ்கிய நிலையில் கிடந்த அந்த காரை வெளியே எடுத்தனர். அப்போது அந்த காருக்குள் அழுகிய நிலையில் டிரைவர் இருக்கையில் ஒரு ஆணும், அவருடைய பக்கத்தில் உள்ள இருக்கையில் ஒரு பெண்ணின் உடலும் இருந்தது.

இது குறித்து ஏற்கனவே மகளை காணவில்லை என்று புகார் கொடுத்த குருராஜ் என்பவரை வரவழைத்து காருக்குள் இறந்து கிடப்பவர் யார்? என்று அடையாளம் காட்டுமாறு போலீசார் கூறினார்கள்.

அப்போது அந்த பெண் உடுத்தியிருந்த உடை மற்றும் நகைகளை வைத்து காருக்குள் இறந்து கிடந்தது தனது மகள் மஞ்சுளா என்றும், டிரைவர் இருக்கையில் இறந்து கிடந்தவர் அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணமகன் அருண்சங்கர் என்றும் அடையாளம் காட்டினார்.

அதைத்தொடர்ந்து இருவரின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் 2 பேரும் எப்படி? இறந்தனர் என்று தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில், ‘கடந்த 20-ந்தேதி மாலையில் மஞ்சுளாவை செல்போனில் தொடர்பு கொண்ட அருண்சங்கர், “நாம் காரில் வெளியில் சென்று வரலாம்” என்று அழைத்துள்ளார். இதையடுத்து மணமக்கள் இருவரும் அன்றைய தினம் காரில் உடுமலையில் இருந்து புறப்பட்டு வாளவாடி மற்றும் சின்னபாப்பனூத்து வழியாக சென்று பி.ஏ.பி. கால்வாய் கரையை அடைந்துள்ளனர். அப்போது அருண்சங்கரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், கால்வாய்க்குள் பாய்ந்துள்ளது. இதில் இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது தெரிகிறது.

திருமணம் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற இருந்த நிலையில் மணமக்கள் இருவரும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.