குன்னூரில் தனியார் தோட்டப் பகுதிகளில் சுற்றித் திரிந்த ஒற்றை ஆண் யானை, மழையின் ஈரத்தன்மை மற்றும் கொசுக்கடியால் மீண்டும் வனப்பகுதிக்கே சென்றிருக்கும் என்று வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையேயுள்ள தனியார் தோட்டங்கள் மற்றும் காட்டேரி பூங்கா போன்ற பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை சுற்றித் திரிந்துகொண்டிருந்தது.

இந்நிலையில், கொசுத் தொல்லை காரணமாகவும், ஈரத்தன்மை வாய்ந்த மலைகளில் வழுக்குதல் அதிகம் காணப்படுவதாலும் மீண்டும் அந்த யானை மேட்டுப்பாளையம் கல்லாறு வனப் பகுதிக்குள் சென்றிருக்க வாய்ப்புகள் இருக்கிறது என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வன அதிகாரிகள் கூறுகையில், “மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் இருந்து வழித்தவறி நீலகிரி வனப் பகுதிக்குள் வந்த இந்த ஒற்றை யானை, உணவு மற்றும் தண்ணீருக்காக இங்குள்ள தோட்டங்களுக்குள் முகாமிட்டிருந்தது. 

கடந்த சில நாள்களாக இப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக கொசுக்கடி ஏற்பட்டதாலும், மண் ஈரத்தன்மை அடைந்ததாலும் மலை ஏற முடியாமல் அந்த யானை, மீண்டும் சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் அருகில் உள்ள கல்லாறு வனப் பகுதிக்குள் சென்றிருக்கும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.