திருவண்ணாமலை
 
திருவண்ணாமலையில் 20 கிலோ மான்கறியுடன் சொரகுளத்தூர் காப்புக்காடு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை வனத்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வன அலுவலர் அர்ச்சனா கல்யாணி உத்தரவின்படி, திருவண்ணாமலை வன சரகர் மனோகரன் தலைமையில் வனவர் சங்கர், வனகாப்பாளர் அரவிந்த், வனக் காவலர்கள் கணேஷ், வேடியப்பன் ஆகியோர் நேற்று முன்தினம் சொரகுளத்தூர் காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது, மல்லாடி அரசு இல்லம் அருகில் இராண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை வனத் துறையினர் மடிக்கி பிடித்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தப்பியோடிவிட்டார். ஒருவர் மட்டும் சிக்கினார். 

அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் மோட்டார் சைக்கிளில் இருந்த பையை சோதித்ததில் அதில் சுமார் 20 கிலோ எடையுள்ள மான்கறி அரை கிலோ மற்றும் ஒரு கிலோ என தனித்தனியாக பொட்டலம் கட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து வனத்துறையினர் மான்கறியையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில், திருவண்ணாமலை அருகில் உள்ள கொண்டம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த கார்த்திக் (20) என்பதும், தப்பியோடியவர் அன்பு (29) என்பதும் தெரிந்தது. மேலும், தப்பியோடிய அன்புவை வனத்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.