வேலூர்

ஆம்பூர் மலைப்பகுதியில் எந்த காலத்திலும் வற்றாத கொண்டப்பட்டியான் சுனை ஏரியை தூர்வாரி சீரமைத்து காட்டு விலங்குகளின் தாகம் தீர்க்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே அமைந்துள்ளது ஊட்டல் தேவஸ்தானம். இங்கிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிக்கல மலைக்கும், சவ்வூட்டல் மலைக்கும் இடையே பரந்தபாறை என்ற பகுதியில்தான் கொண்டப்பட்டியான் சுனை ஏரி இருக்கிறது.

கொளுத்தும் வெயிலில் பல்வேறு நீர்நிலைகள் வறண்டு காய்ந்து கிடக்கின்றன. ஆயிரம் அடிக்கும் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்தும், ஒரு சொட்டு தண்ணீரை கூட பார்க்க முடியாத அளவு வறட்சி நிலவுகிறது.

ஆனால், மலையின் மேல் காட்டு விலங்குகளுக்கும், கால்நடைகளுக்கும் வரமாக அமைந்துள்ளது கொண்டப்பட்டியான் சுனை ஏரி.

இந்த சுனை ஏரியானது இரண்டு பக்கம் மேடான பாறை பகுதியும், இரண்டு பக்கம் கட்டு கற்களாலும் அமைந்துள்ளது.

பத்து அடி அகலத்திலும், 100 மீட்டருக்கு மேல் நீளத்திலும் உள்ள இந்த நீர்நிலை எந்த காலத்திலும் வறண்டதே இல்லை. அந்த பகுதியில் இருக்கும் மக்கள் காலம் காலமாக இதில் தண்ணீர் இருப்பதை பார்த்து வருகின்றனர் என்று பெருமை கூறுகின்றனர்.

கால்நடை முதல் அதனை மேய்ப்வர்கள் வரை அனைவரும் மதிய நேரத்தில் தாகம் தீர்க்க இங்குதான் வந்து செல்வர். மேலும், இந்த ஏரியைச் சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட பாறை குடில்களும் உள்ளன.

“காட்டுப் பகுதியில் நீர் நிலைகளை மேம்படுத்த தண்ணீர் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வனத்துறை செய்கின்றன. இருந்தாலும், எந்த பயனும் இல்லை.

எனவே, எந்த காலத்திலும் வற்றாத நீரை கொண்டுள்ள இந்த ஏரியை தூர்வாரி, காட்டு விலங்குகளின் தாகம் தீர்க்கவும், அதன் அருகில் உள்ள பாறை குடில்களை பேணிக் காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.