Maintain the law along with law and order - Commissioner AK Vishwanath
சட்டம் ஒழுங்கு பணியை பராமரிப்பதோடு, மரம் நட்டு அவற்றையும் பராமரியுங்கள் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாத் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு வர்தா புயல் வந்ததால் சென்னையின் பெருமளவு மரங்கள் வேரோடு விழுந்து நாசமாயின.
சாலையெங்கும் மரமாக காட்சி அளித்த பகுதிகளெல்லாம் வெட்ட வெளியாக காட்சி அளிக்கின்றன.
இந்நிலையில் தன்னாரவலர்கள், சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து சென்னை முழுவதும் மரம் நட்டு பராமரிக்கும் பொறுப்பை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ. கே. விஸ்வநாத் கையில் எடுத்துள்ளார்.
அந்தந்த காவல் நிலைய எல்லையில் உள்ள நீர்நிலை பகுதிகள், காவல் நிலைய வளாகங்கள், காவலர் குடியிருப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் மரம் நட்டு காவலர்கள் அதை பராமரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன் தரும் மரங்களை வனத்துறை மூலம் வாங்கி நடப்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆம் தேதி உலக சுற்று சூழல் தினத்தையொட்டி தொடங்கிய இப்பணி மூலமாக இதுவரை 28 ஆயிரம் மரக்கன்றுகள் சென்னை முழுவதும் நடப்பட்டுள்ளது.
குற்றங்களை தடுப்பது, குற்றவாளிகளை பிடிப்பது என கடமையாற்றவதோடு விட்டுவிடாமல் மரம் வளர்க்க அறிவுறுவதன் மூலம் சமூக பொறுப்பையும் காவலர்களுக்குள் வளர்ப்பதில் ஈடுபட்டு வருவதாக காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாத் கூறியுள்ளார்.
இந்த ஆண்டிற்குள் 1 லட்சம் மரங்களை நடுவதற்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
