ச்சும்மாவே சாமியாடும் மணல் மாஃபியாக்கள் மேள சத்தத்தம் வேறு கேட்டால் அடக்கிக் கொண்டு இருப்பார்களா?...
தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தாண்டவமாட காரணங்களில் ஒன்று நீர் நிலைகள் பல்லாண்டுகளாக தூர்வாரப்படாமையும்தான்.

இது ஜெயலலிதா ஆண்ட அரசுக்கும், ஜெயலலிதா பெயரைச்சொல்லி ஆளும் அரசுக்கும் மிக நன்றாகவே தெரியும். விவசாய இயக்கங்களும், சூழல் சார்ந்த என்.ஜி.ஓ.க்களும் எவ்வளவோ குரல் கொடுத்தும் கேட்கும் சக்தியற்ற மாற்றுத்திறனாளியாகவே இருந்துவிட்டது அரசு. ஆனால் என்று ஸ்டாலின் குளம் தூர்வாரலில் இறங்கினாரோ உடனேயே எடப்பாடி குரூப்பும் அதில் கவனம் செலுத்த துவங்கியது. 

அதிலும் ஆச்சரியமாக ஒரு உத்தரவை போட்டார்கள். அதாவது ஏரிகளில் இருந்து பொதுமக்களும் விவசாயிகளும் இலவசமாக மணல் அள்ளிக் கொள்ளலாம் என்பதுதான் அது. அதன்படி வண்டல் வகை மண்ணை விவசாய பயன்பாட்டுக்காக ஒரு ஏக்கருக்கு முப்பது டிராக்டர் எடுக்கலாம், களி மண்ணை மண்பாண்டம் தயாரிப்பாக ஒரு நபர் இருபது டிராக்டர் எடுக்கலாம்...என்று விதிகள் அமைக்கப்பட்டன. 

ஆனால் அரசாங்கம் விதிகளை வடிவமைப்பதே ஒரு கூட்டம் சதி செய்து சம்பாதிப்பதற்காகத்தான் என்பதுதானே காலங்காலமாக தமிழகம் கண்ட காட்சி. ஏற்கனவே அதிகாரிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு ஆற்று மணலை கொள்ளை அடித்து வரும் மணல் மாஃபியாக்கள் இந்த இலவச திட்டத்திலும் நூற்றுக்கணக்கான லாரிகளுடன் களமிறங்கியிருக்கிறார்கள். 

விவசாயி எனும் முகமூடியை அணிந்து கொண்டு இலவசமாக  மண்ணள்ளும் உரிமையை பெற்றபடி ஏரி,குளங்களுக்குள் டயர் வைப்பவர்கள் சகட்டுமேனிக்கு மணல் அள்ளுவதாக புகார்கள் வெடிக்கின்றன. களிமண், வண்டல் மண் ஆகியவற்றைத்தான்  அரசு எடுத்துக் கொள்ள சொல்லியிருக்கிறது. அதிலும் குறிப்பிட்ட தூரம் வரைதான் சென்று எடுக்க முடியும். ஆனால் இந்த விதிகளையெல்லாம் வீதியில் எறிந்துவிட்டு போட்டி போட்டுக் கொண்டு ஆளாளுக்கு சகட்டுமேனிக்கு தூரங்கள் சென்று குளங்களை நோண்டி நொங்கெடுக்கிறார்களாம். 

ஏரிகளில் இவர்கள் போடும் ஓட்டையை பார்த்தால் தருமபுரியில் ஒரு குளத்தினுள் நுழைந்து அப்படியே திருவண்ணாமலையில் வெளியே வந்து அருணாசலேஸ்வரரைப் பார்த்து அரோகரா போடலாம் போலிருக்கிறது என்கிறார்கள்.

லாரிகள் கும்பல் கும்பலாய் வந்து போவதைப் பார்த்தால் நாளைக்கே குழிக்குள் ஒரு நாயர் டீக்கடை போடவும், நாளை மறுநாள் முதல் போண்டா போடவும் வாய்ப்பிருக்கிறது எனுமளவுக்கு தூர்வாரலில் துவம்சம் நடக்கிறது என்கிறார்கள் பிரச்னையை உற்று கவனிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். 

இலவசமாக மண் எடுக்க வரும் விவசாயிகள் அதிகாரிகளிடம் பர்மிட் வாங்கிய பிறகுதான் உள்ளே வரமுடியும். ஆனால் குறைந்தளவு அதிகாரிகள், அரசு ஊழியர்களே இருப்பதால் யார் உண்மை? யார் போலி? என்பதை கண்டறிவதிலும், குளத்தினுள் நிர்ணயிக்கபட்ட தூரத்தில்தான், வரையறுக்கப்பட்ட ஆழத்தில்தான், மணல் அள்ளுகிறார்களா என்பதை கண்காணிக்க முடியவில்லையாம். 

ஆக இப்படி ஏரி, குளங்களில் ஃபிராடுத்தனம் செய்து அள்ளும் பல வகையான மணலை ஒரு லோடு நான்காயிரம் வரை விற்கிறார்களாம் மாஃபியாக்கள். 

டெல்லிக்கு காவடி தூக்கும் அதிகார மையத்துக்கு குளம், ஏரிகளை கவனிக்க ஏது நேரம்?! ஆறுகளைப்போல் குளங்களும், ஏரிகளும் அரசு அனும்தியுடன் கொள்ளை போகிறது. யார் தடுப்பது தண்டிப்பது குற்றவாளிகளை? என்று வருந்துகிறார்கள் விமர்சகர்கள்.
அள்ளுங்கடா நீங்க அள்ளுங்கடா!