மதுரை சிறைத்துறை எஸ்பிக்கு பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ, வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன்.  பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளன. 

இவரது அண்ணன் கடந்த 2006ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களிடம், அதிகளவில் தூக்க மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். கடந்த வாரம் சிறையில் பரிசோதனைக்கு வந்த பெண் டாக்டரிடம், தனக்கு தூக்க மாத்திரைகள் அதிகம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு டாக்டர் மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர், தனது சட்டையை கழற்றி டாக்டர் முகத்தில் வீசினார். 

டாக்டர் கொடுத்த புகாரன்படி சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா, சிறை காவலர்கள் மூலம் திருப்தியாக கவனித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அன்று இரவே அவர், நன்னடத்தை விதி  காரணமாக விடுதலை செய்யப்பட்டார். வெளியே வந்த அண்ணன், தனது தம்பி புல்லட் நாகராஜனிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி புல்லட் நாகராஜன், மதுரை சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா மற்றும் டாக்டருக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது. 

வாட்ஸ் அப்பில் புல்லட் நாகராஜன் பேசிய ஆடியோ:

கிரேட் ஜெனரல் புல்லட் நாகராஜ் பேசுகிறேன். தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயில் கிடையாது. என் கண் முன்னாடி எத்தனையோ பேரை ஜெயிலில் அடிச்சு இருக்கீங்க? மதுரை ஜெயிலை பொருத்தவரை உனக்கு நிர்வாகத்திறமையே கிடையாது. அடிப்பதற்காகவே கமாண்டோ பார்ட்டிகளை வச்சுருக்கியா...?

உன்னைய மாதிரி சிறையில் கைதியை அடிச்ச ஒரே காரணத்திற்காக, ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரிச்சு கொன்னது ஞாபகமிருக்கும். ஏன் திருந்த மாட்டேங்கிறீங்க? நாங்க திருந்தி படிச்சு இப்ப பெரிய ஆளாக இருக்கோம். கைதி யாருக்காவது பிரச்சனை வரட்டும். நீ என்ன செய்தியோ, அதையே நான் செய்ய வேண்டியிருக்கும். 

‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ அதை பத்தி இந்த புல்லட் நாகராஜன் கவலைப்பட மாட்டான். மேம், உங்களுக்கு ஒரு ஆப்பர்சூனிட்டி தர்ரேன். தலைமை காவலர் பழனிக்குமார் இருக்காரே? கஞ்சா கடத்துறவரு... அவரை வச்சு கைதிகள் காசை கொள்ளையடிக்கிறீங்களே? இதற்கு வெட்கமா இல்லையா? இதை விட்டு வேறு வேலையை பார்த்துடலாம்.

இப்ப பேசறேன்லே... ஏதாவது செய்து பாருங்கள். உங்களால முடியாது. நான் பழைய புல்லட் நாகராஜன் கிடையாது. நீங்க எப்படியும் வெளியில் வந்து தானே ஆகணும். நான் ஒண்ணும் செய்ய மாட்டேன். பயலுக ஏதாவது செய்திடுவாங்க.. அப்புறம் லாரி உங்க மேல கூட ஏறலாம். பொம்பளையாக இருக்கீங்க... திருந்துங்க...

இப்படி தொடந்து சிறைத்துறை எஸ்பிக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் வைரலாக பரவி வருவது சிறைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புல்லட் நாகராஜன் பெங்களூரு மற்றும் சென்னை என மாறி மாறி வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சிறைத்துறை எஸ்பி ஊர்மிளாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ரவுடி நாகராஜை நான் பார்த்ததுகூட இல்லை. எனக்கு வந்த மிரட்டல் ஆடியோவை வைத்து சைபர் கிரைமில் புகார் செய்ய இருக்கிறேன்” என கூறினார்.