மதுரையில் 5.5 கி.மீ தூரம் பூமிக்கு அடியிலும், 26.5 கி.மீ தூரம் மேல்மட்ட பாலத்திலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
Madurai Metro Rail project: மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன. மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ள பகுதிகளில் பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்றான சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு அருமருந்தாக மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளன. சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரங்களாக உள்ள மதுரை, கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
மதுரையை பொறுத்தவரை ம் 11 ஆயிரத்து 368 கோடி ரூபாய் செலவில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. இதை உறுதிப்படும் வகையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடந்தது.
மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடந்த இந்த ஆலோசனக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குனர் எம்.ஏ.சித்திக், திட்ட இயக்குனர் அர்ச்சுனன், மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்பிறகு பேசிய மெட்ரோ அதிகாரிகள், ''மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 26 ஸ்டேஷன்களுடன் 32 கி.மீ தூரத்துக்கு அமைய உள்ளது. முதற்கட்டமாக நிலம்கையக்கப்படுத்தும் பணிகள் நடைபெறும்'' என்றனர்.
இந்நிலையில், இன்று மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் குறித்து மெட்ரோ திட்ட அதிகாரிகள், மதுரை மாநகராட்சி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை, குடிநீர் வடிகால் வாரியம், மின் வாரியம் என பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இன்று கூட்டாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதாவது மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரி பகுதி முதல் திருமங்கலம் பகுதி வரை அவர்கள் கூட்டு ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றனர்.
இந்த வழித்தடத்தில் குடிநீர், மின்சாரம் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வது அவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை பொறுத்தவரை 5.5 கி.மீ தூரம் பூமிக்கு அடியிலும், 26.5 கி.மீ தூரம் மேல்மட்ட பாலத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 100 மீ தொலைவில் தான் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
